🌏நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் படிப்படியாக மூடல்… செலவினங்களை தவிர்க்க வங்கிகள் நடவடிக்கை

Vector illustration of a funny ATM machine character

♨வேலூர்: நாடு முழுவதும் நிர்வாக செலவினங்களை தவிர்க்க காற்று வாங்கும் ஏடிஎம் மையங்களை மூட வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 2.21 லட்சம் ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளுக்கு ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த ஏடிஎம் மையங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், மும்பையில் உள்ள பிரதான சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நாட்டின் எந்த வங்கியின் ஏடிஎம் மையத்திலும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காகவே ஏஜென்சிகள் உள்ளன. ஏடிஎம் மையங்கள் பயன்பாடு மூலமும் வங்கிகளுக்கு வருவாய் உண்டு என்பதால் ஒவ்வொரு வங்கியும் போட்டிப்போட்டு கொண்டு ஏடிஎம் மையங்களை ஆங்காங்கே திறந்தன. இம்மையங்களுக்கு தனியாக செக்யூரிட்டிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் ஏடிஎம் மையங்களில் திருட்டு, கொள்ளை போன்றவை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதனை தவிர்க்க ஒவ்வொரு ஏடிஎம் மையத்திலும் நல்ல உடல் தகுதியுடன் கூடிய இளமைத்துடிப்புடன் உள்ள செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும் என்று காவல்துறை மட்டுமின்றி ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.இந்நிலையில் வருவாய் இல்லாத ஏடிஎம் மையங்களை படிப்படியாக மூட பல வங்கிகளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி, சர்வர் பராமரிப்பு உட்பட பல்வேறு ஏடிஎம் தொடர்பான பணிகளை ஏஜென்சிகளிடம் விட வேண்டும் என்ற அறிவுறுத்தல் உட்பட பல காரணங்களால் அதிகரிக்கும் நிர்வாக செலவினங்களை தவிர்க்க வேண்டும் என்பதே காரணம் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூரை சேர்ந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பொதுமேலாளர் ஒருவர் கூறும்போது, ‘சாதாரணமாக ஒரு ஏடிஎம் மையத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 பேர் வரை வந்து பணபரிமாற்றத்துக்காக வரவேண்டும். அதுவும் ஏடிஎம் மையம் சம்பந்தப்பட்ட வங்கி அல்லாத பிற வங்கி ஏடிஎம் கார்டுதாரர்கள் வந்தால்தான் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தின் வங்கிக்கு வருவாய் கிடைக்கும். அதன்மூலம் ஏடிஎம் மைய செக்யூரிட்டி, தொலைதொடர்புக்கான செலவினம், சர்வர் பயன்பாட்டுக்கான கட்டணம, மின்கட்டணம், வாடகை, பணம் நிரப்பும் ஏஜென்சிகளுக்கான கட்டணம் என பல செலவினங்கள் சமாளிக்கப்பட்டன.ஆனால், ரிசர்வ் வங்கி, ஏடிஎம் மையம் தொடர்பான பராமரிப்புப்பணிகளை தனியார் ஏஜென்சிகள் மூலம் மேற்கொள்வது, செக்யூரிட்டிகளை விதிமுறைப்படி நியமிப்பது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது ஒருபுறம் என்றால் டிஜிட்டல் பரிமாற்றம் வேறு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி 30 சதவீத பணபரிமாற்றங்கள் டிஜிட்டல் நடைமுறைக்குள் வந்துள்ளன. இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் ஏடிஎம் மையங்களை பராமரிப்பதில் நிர்வாக செலவினங்கள் அதிகரிக்கும். பல ஏடிஎம்களில் வாடிக்கையாளர்களே வருவதில்லை. எனவே, இதுபோன்ற வருவாய் இல்லாத காற்று வாங்கும் ஏடிஎம்களை மூட வேண்டிய நிலைக்கு வங்கிகள் வந்துள்ளன’ என்றார்.♨