14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்

14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்

சென்னை, ‘தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தை ஒட்டிய ஆந்திர கடற்பகுதியில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், கனமழை பெய்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழை தொடரும்.

அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம், உடையாலிபட்டியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.🔴