148 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கப்பூரில் உள்ள 148 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்ற இந்தியர்கள் அங்கு பல்வேறு கோயில்களை கட்டினர். இத்தகைய கோயில்களில் 12 முதல் 15 ஆண்டு இடைவெளியில் கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் மிகவும் பழமை வாய்ந்த இந்து கோயில்களில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயில். வாட்டர்லூ தெருவில் 1870-ல் கட்டப்பட்ட இந்தக் கோயிலை அதன் பழமை மாறாமல் சீரமைக்கும் பணி 2014-ம் ஆண்டு தொடங்கியது.

ரூ.20 கோடியில் பணிகள்

கடந்த 4 ஆண்டுகளாக சுமார் ரூ.20 கோடி செலவில் நடைபெற்று வந்த இந்தப் பணிகள் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலின் பிரதான நுழைவாயிலில் மற்றும் கோயிலின் உச்சி கூரையில் (குவிமாடம்) புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மதகுரு சடங்குகளைச் செய்தார்.

இவ்விழாவில் சிங்கப்பூர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, “சிங்கப்பூரில் பல்வேறு மத, இன மக்கள் வசிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கை, கலாச்சாரத்துக்கு எவ்வாறு மதிப்பளிக்கின்றனர் என்பதற்கு இந்தக் கோயில் சான்றாக விளங்குகிறது” என்றார்.

கும்பாபிஷேக விழாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி பல்வேறு கலை, நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிற்பிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களின் உதவியுடன் நவீன முறைப்படி இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்ப வேலைப்பாடுகளை பக்தர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.