புதுடெல்லி : 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியிலிருந்து மாற்றம் செய்யுமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து எம்எல்ஏ ஜக்கையனை தவிர மற்ற 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் அவருடன் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் பேரவை தலைவரின் முடிவு விதிகளுக்கு முரணானதுஎன்று கூறி பேரவைத் தலைவர் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் தங்களது தீர்ப்பில் மாறிபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் தங்க.தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் சார்பிலும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு விடப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த வழக்கில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற செல்வாக்கு பெற்ற நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இதன் விசாரணை தமிழகத்தில் நடந்தால் நேர்மையாக நடக்காது, எனவே உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதே இது தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.