18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டு உள்ளார். #MLAsDisqualificationCase
சென்னை,

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக கவர்னரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டசபை சபாநாயகர் தனபால் முடிவு செய்தார்.
இதுகுறித்து 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதில், எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மற்ற 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
தலைமை நீதிபதி தன் தீர்ப்பில், ‘18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் உள்நோக்கம் இல்லை. 18 பேருக்கும் போதிய கால அவகாசம் வழங்கிய பின்னரே, நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், சபாநாயகரின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அவரது உத்தரவு சரிதான்’ என்று கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு எதிரான முடிவை நீதிபதி எம்.சுந்தர் எடுத்தார். அவர் தன் தீர்ப்பில், ‘சபாநாயகரின் உத்தரவு உள்நோக்கம் கொண்டது தான். ஜக்கையன் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதம்போல், இந்த 18 பேர் விவகாரத்தில் செயல்படவில்லை. அதனால், 18 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இரு நீதிபதிகள் இருவிதமான தீர்ப்பை வழங்கியதால், எது சரியானது? என்று முடிவு செய்வதற்காக 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யவேண்டும். இதற்காக இந்த வழக்கை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேசுக்கு, தலைமை நீதிபதியும், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து 3-வது நீதிபதியாக யாரை நியமிப்பது என்று மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பரிசீலித்தார். பின்னர், ஐகோர்ட்டில், மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி எஸ்.விமலாவை நியமிக்க முடிவு செய்தார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது நீதிபதியாக நியமிக் கப்பட்டுள்ள நீதிபதி எஸ். விமலா, 1957-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பிறந்தார். இவர் சட்டப்படிப்பை முடித்து, கடலூர் மாவட்டத்தில் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். இவர், 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.