2-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரிக்கை

தினசரி டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தினசரி டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழகத்தில் சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனமும், அதனை சார்ந்த 40 சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பும் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்து இருக்கின்றன. இப்படியாக 2 சங்கங்களும் மாறி மாறி அறிவித்த வேலைநிறுத்தத்தினால் சில சங்கங்கள் குழப்பம் அடைந்து இருக்கின்றன.
வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் பெருமளவில் பாதிப்பு இல்லை. சில லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டாலும், ஏராளமான லாரிகள் இயங்கியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில், நேற்று முன்தினத்தை விட கொஞ்சம் கூடுதலாக லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
போராட்டம் குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சுகுமார் கூறியதாவது:-
முதல் நாளை காட்டிலும் இன்று (நேற்று) லாரி உரிமையாளர்கள் பலர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். எங்களுடைய பிரதான கோரிக்கை டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது தான். அதை மாநில அரசே செய்ய முடியும். டீசல் மீதான 29 சதவீத வரியில் 3 சதவீதத்தை குறைத்தால் டீசல் விலை ரூ.2 குறையும். இதனால் விலைவாசியும் குறையும்.
கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் டீசல் மீதான வரியை குறைத்து இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து 30 ஆயிரம் லாரிகள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன. அப்படி செல்லும் லாரிகள் தமிழகத்தில் குறைந்த அளவில் டீசலை நிரப்பிக்கொண்டு, டீசல் விலை குறைவாக உள்ள மாநிலங்களில் அதிக அளவு டீசலை நிரப்பிக்கொள்கின்றனர். இதனால் தமிழக அரசின் வருவாயும் பாதிக்கப்படுகிறது.
எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு, மாநில அரசு எங்களை அழைத்து பேசி, டீசல் மீதான வரியை குறைத்து, விலையையும் குறைக்க வேண்டும். இதை நிவர்த்தி செய்தால் எங்களுடைய வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவோம். அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். எங்களுக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் நலன் தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரைமுறை இல்லாமல் டீசல் விலை உயர்த்தப்படுவதையும், காப்பீட்டு கட்டண உயர்வு, சுங்க கட்டண உயர்வை கண்டித்தும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிறகு லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் சதிவேலைகளில் ஈடுபட்டு, லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 18-ந்தேதி முதல் நடைபெற்று வருவதாக கூறி வருகின்றனர். இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல். தமிழகத்தில் வழக்கம்போல் அனைத்து லாரிகளும் இயங்கி கொண்டிருக்கிறது.
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தபடி லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் நடைபெறும். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.