20–வது உலக கோப்பை 2014 (சாம்பியன் ஜெர்மனி)

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை 2–வது முறையாக பிரேசில் பெற்றது.

நடத்திய நாடு–பிரேசில், பங்கேற்ற அணிகள்–32

லக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை 2–வது முறையாக பிரேசில் பெற்றது. போட்டியை நடத்திய பிரேசில் தவிர மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் தெரிவு செய்யப்பட்டன. மொத்தம் 203 நாடுகள் 820 தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடின.

போஸ்னியா அறிமுக அணியாக அடியெடுத்து வைத்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பியா தகுதி பெற்றது. அதே சமயம் 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பராகுவே அணி தகுதி பெற தவறியது. கோலா? கோல் இல்லையா? என்ற சர்ச்சைக்கு விடைகொடுக்கும் வகையில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் இந்த உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்டது.

முந்தைய 8 உலக சாம்பியன்களும் இந்த உலக கோப்பையில் அணிவகுத்து நின்றது சிறப்பம்சமாகும். ஆனால் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் 6 ஆண்டுகள் கால்பந்து உலகின் சக்ரவர்த்தியாக வலம் வந்த ஸ்பெயினின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இதே போல் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து, இத்தாலியும் முதல் சுற்றை தாண்டவில்லை.

போட்டியை நடத்திய பிரேசில் மீதே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அணியும் கால்இறுதிவரை கம்பீரமாக முன்னேறியது. கொலம்பியாவுக்கு எதிரான கால்இறுதியில் முதுகெலும்பு முறிந்ததால் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரால் அடுத்த ஆட்டத்தில் ஒதுங்கி இருக்க வேண்டியதாகிவிட்டது. நெய்மார் இல்லாத பிரேசில் அணி ஏதோ முதுகெலும்பு இல்லாத அணி போல் ஜெர்மனிக்கு எதிரான அரைஇறுதியில் விளையாடியது.

பிரேசில் அணியை கதறடித்த ஜெர்மனி அணியினர் 7–1 என்ற கோல் கணக்கில் பந்தாடினர். 100 ஆண்டுகளில் பிரேசிலின் மோசமான தோல்வி இது தான். தோல்வியின் வேதனையை தாங்க முடியாமல் பிரேசில் ரசிகர்கள், வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதன் பின்னர் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் 0–3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடமும் உதை வாங்கியது. இந்த உலக கோப்பையில் பிரேசில் மொத்தம் 11 கோல்கள் அடித்து 14 கோல்களை விட்டுக்கொடுத்தது. பிரேசில் அணி அதிக கோல்களை தாரை வார்த்த உலக கோப்பை இது தான்.

இன்னொரு பக்கம் லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுகளிலும் வாகை சூடி 24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிசுற்றை எட்டியது.

ரியோ டி ஜெனீரோவின் மரகானா ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி– அர்ஜென்டினா அணிகள் மல்லுகட்டின. வழக்கமான நேரத்தில் இரு அணி தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினாவின் ‘ஹீரோ’ லயோனல் மெஸ்சி சோபிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 113–வது நிமிடத்தில் ஜெர்மனி மாற்று ஆட்டக்காரர் மரியோ கோட்சே கோல் அடிக்க, அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

முடிவில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை பதம்பார்த்து 4–வது முறையாக பட்டத்தை உச்சிமுகர்ந்தது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் பட்டத்தை சொந்தமாக்கிய முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது. பிளவுப்பட்ட ஜெர்மனி ஒன்றிணைந்த பிறகு ருசித்த முதல் உலக கோப்பை இதுவாகும். வெற்றிகோலை அடித்த ஜெர்மனி வீரர் கோட்சே, பார்மில் இல்லை என்று கூறி இந்த ஆண்டு (2018) உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி மூத்த வீரர் மிரோஸ்லாவ் குளோஸ், கானா மற்றும் பிரேசிலுக்கு எதிராக தலா ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதையடுத்து உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவரான பிரேசிலின் ரொனால்டோவின் (15 கோல்) உலக சாதனையை முறியடித்த திருப்தியுடன் அவர் விடைபெற்றார்.

மொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 171 கோல்கள் பதிவாகின. தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் தங்க ஷூ விருதையும், சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சியும் பெற்றனர். இந்த உலக கோப்பையை காண ஏறக்குறைய 10 லட்சம் பேர் பிரேசிலுக்கு வருகை தந்தனர். மொத்தம் 33 லட்சத்து 86 ஆயிரத்து 810 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

‘கடி மன்னன்’ சுவாரஸ்

இந்த உலக கோப்பையில் ‘டி’ பிரிவில் இத்தாலிக்கு எதிரான கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது உருகுவே அணியின் முன்னணி வீரர் லூயிஸ் சுவாரஸ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியது. ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கையில், பந்து வருவதை எதிர்நோக்கி நின்ற இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் இடது தோள்பட்டை மீது திடீரென பாய்ந்து கடித்து தள்ளினார். இதனால் அவர் நிலைகுலைந்து மைதானத்தில் கீழே விழுந்தார். பற்களின் தடம் செலினியின் தோள்பட்டையில் பதிந்து இருந்தது. இது குறித்த விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுவாரசுக்கு 9 போட்டிகளிலும், 4 மாதங்கள் கால்பந்து சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தது. அத்துடன் ரூ.67 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.