‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் மூலம் வெற்றிகரமாக வலம் வருகிறது விஜய் – அட்லீ கூட்டணி. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள். விரைவில் லாஸ்-விகாஸில் விஜய்யின் அறிமுகப் பாடலை படமாக்க பயணிக்கவுள்ளார்கள்.
’சர்கார்’ இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், விஜய்யின் அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்கள் அவரோடு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தனது அடுத்த படம் ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ வினோத், அட்லீ, பேரரசு உள்ளிட்ட பல இயக்குநர்கள் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தாலும், அட்லீ கதையைத்தான் விஜய் டிக்கடித்து இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இம்முறை பழைய படங்களின் மறுவடிவம், வசனங்கள் உள்ளிட்ட எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் முழுக்க கமர்ஷியல் பாணியிலான கதையை விஜய்க்காக உருவாக்கியிருக்கிறாராம் அட்லீ.