4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: சுமார் 355 கோடி செலவு…!

பெங்களூரு: கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி, 52 வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்துக்காக ரூ.355 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஆர்டிஐயில் அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம், பயணச் செலவு குறித்து பெங்களூரை  சேர்ந்த சமூக ஆர்வலர் பீமப்பா ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருந்தார். முதலில் இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் தர மறுத்துவிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்று கூறியபின் உள்நாட்டு பயணம் குறித்து தர இயலாது வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலை மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து இதுவரை 41 முறை 52 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை ரூ.355.78 கோடி அரசுக்குச் செலவாகியுள்ளது. ஏறக்குறைய 4 ஆண்டுகளில் 165 நாட்கள் வெளி நாட்டில் தங்கியுள்ளார்.

இதில் அதிகபட்சமாக பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் கனடா நாடுகளுக்கு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை மோடி சென்றார். இந்தப் பயணத்துக்கு மோடி செல்லும் போது, ரூ.31 கோடியே, 25 லட்சத்து 78 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி 9 நாட்கள் வெளிநாட்டில் இருந்தார். குறைந்தபட்சமாகக் கடந்த 2014-ம் ஆண்டு, ஜூன் 14 மற்றும் 15ம் தேதிகளில் பூடான் நாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றார், அப்போது, அவரின் செலவு குறைந்தபட்சமாக ரூ.2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ஆகியுள்ளது. இது மோடியின் ஒருநாள் செலவாகும்.

 

Leave a comment

Your email address will not be published.