4–வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார், ஜோகோவிச்

லண்டன்,
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4–வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 2 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), கெவின் ஆண்டர்சனும் (தென்ஆப்பிரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் இரு செட்டை எளிதில் கபளீகரம் செய்தார். 3–வது செட்டில் எதிராளி கொஞ்சம் சவால் அளித்தாலும் அதையும் ‘டைபிரேக்கர்’ வரை சென்று தனதாக்கினார். 2 மணி 19 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–2, 6–2, 7–6 (3) என்ற நேர் செட்டில் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து 4–வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கையில் ஏந்தினார். ஏற்கனவே இங்கு 2011, 2014, 2015–ம் ஆண்டுகளிலும் வாகை சூடியிருக்கிறார்.
காயம் மற்றும் போதிய பார்ம் இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லாமல் தடுமாறிய ஜோகோவிச் மீண்டும் தனது திறமையை நிரூபித்து காட்டி இருக்கிறார். தனது 3 வயது மகன் ஸ்டீபன், கேலரியில் இருந்து கொண்டு ‘அப்பா…அப்பா’ என்ற உரக்க கத்தியது களத்தில் தனக்கு உத்வேகம் அளித்ததாக வெற்றிக்கு பிறகு 31 வயதான ஜோகோவிச் கூறினார். அவருக்கு ரூ.20¼ கோடியும், 2–வது இடம் பிடித்த ஆண்டர்சனுக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச் அறுவடை செய்த 13–வது கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்–6, பிரெஞ்ச் ஓபன்–1, விம்பிள்டன்–4, அமெரிக்க ஓபன்–2) இதுவாகும்.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 பட்டம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (17 பட்டம்), அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14 பட்டம்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜோகோவிச் இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published.