இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வினியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விகி இன்று தனது புதிய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த புதிய முயற்சியின் வாயிலாக வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களையும் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது ஸ்விகி. மேலும் அந்நிறுவனம், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் அனைத்து உடல்நலம் சார்ந்த பொருட்களையும் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது.
‘ஸ்விகி ஸ்டோர்ஸ்‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி, ஏற்கெனவே உள்ள தனது மொபைல் செயலியின் மூலம் பயன்படுத்த முடியும் என்று ஸ்விகி தெரிவித்துள்ளது. இந்திய அளவில், 80 நகரங்களில் ஏற்கெனவே ஸ்விகி தனது உணவு டெலிவரி சேவையை நடத்திவருகிறது. இந்நிலையில், இந்தப் புதிய முயற்சியின் மூலம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ‘பிக் பாஸ்கேட்‘ நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்விகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விகி நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு, சுமார் 21,300 கோடி ரூபாய் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் சுமார் 7,100 கோடி ரூபாய் முதலீட்டை நாஸ்பர்ஸ் என்னும் தென் ஆப்ரிக்க நிறுவனத்திடமிருந்து பெற்றுளது ஸ்விகி. கடந்த வாரம் செய்த அறிவிப்பின்படி ஸ்விகி, கின்ட்.ஐஓ என்னும் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பொருட்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் அண்டில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தற்போது மிக அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.