யப்பா நீ ப்ராக்டீசே பண்ண வேணாம்.. பாண்டியாவை பார்த்து பதறிய டிராவிட்.. டென்சன் ஆன ரோஹித்
சென்னை : இந்திய அணியில் ஏற்கனவே சுப்மன் கில் காய்ச்சலால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார்
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சென்னையில் வலைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அதைக் கண்டு பதறி உள்ளது பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் முதல் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி தன் 11 பேர் கொண்ட அணியை உறுதி செய்யவே மிகவும் போராடி ஒரு வழியாக உலகக்கோப்பை தொடருக்கு முன் யார், யார் எந்தெந்த இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளனர், பந்துவீச்சில் யார், யார் களமிறங்கப் போகிறார்கள் என ஒரு முடிவுக்கு வந்தது.
அந்த 11 வீரர்களில் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இதில் சுப்மன் கில் காய்ச்சலால் ஓய்வில் இருக்கிறார். அவர் குறைந்தது இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் ஆட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா குழப்பத்தில் இருக்கும் நிலையில், அடுத்த இடியை இறக்கப் பார்த்தார் ஹர்திக் பாண்டியா. அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மேற்கொண்டு பயிற்சி செய்ய வேண்டாம் என உள்ளே அனுப்பி இருக்கின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி அவருக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
எனினும், விரலில் காயம் என்பதால் அவரால் ஆஸ்திரேலியா போட்டியில் பந்து வீச முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. ஏற்கனவே, முதல் போட்டி பரபரப்பில் இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது மேலும் பதற்றத்தை கூட்டி உள்ளது. பாண்டியா பந்து வீச முடியாமல் போனால் இந்திய அணிக்கு நிச்சயம் சிக்கல் தான்.