கடந்த வாரம் இந்தியா நிகழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டத்தால் தகர்க்கப்பட்ட செயற்கைக் கோளின் துகல்கள் விண்வெளியை சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை முயற்சியை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தச் சோதனை குறித்து அறிவித்தார். அப்போது மோடி, “இந்தியா அமைதியை விரும்புகிறது. எனினும் இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, எந்த நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவின் ஏ-சாட் சோதனை அதிக அளவில் குப்பைகளை விண்வெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசா நிர்வாக அதிகாரி ஜிம் பிரைடன்ஸ்டீன் , “விண்வெளியில் புதிதாக உருவாகியுள்ள இந்தக் குப்பை பொருட்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கக் கூடிய நிலை உண்டாகியுள்ளது. 400 துண்டுகள் சுற்றி வந்தாலும் இவற்றில் 60 துண்டுகளை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளபட்டுள்ளது. இதில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
(சர்வதேச விண்வெளி நிலையம்)
தகர்க்கப்பட்ட செயற்கைக் கோளின் 10 சென்டி மீட்டர் நீளத்திற்கு மேற்பட்ட துண்டுகளை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளும் செயற்கைக் கோள் தகர்ப்பை மேற்கொண்டால் நிலைமை மேலும் மோசமாகும். அத்துடன் இந்தச் சோதனை மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்படும் பாதிப்பு 44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனினும் 2007ஆம் ஆண்டு சீனா நடத்திய சோதனையின் பாதிப்பைவிட இந்திய சோதனையின் பாதிப்பு குறைவே” எனக் கூறியுள்ளார்.